3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் ராகு - கேது, குரு, சனிப்பெயர்ச்சி..! - உங்கள் ராசிக்கு எப்படி அமையப் போகிறது..?மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017இல்) குரு, ராகு - கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என 9 நவக்கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும்.
சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும். குரு ஓராண்டு, ராகு- கேது ஒன்றரை ஆண்டு, சனி இரண்டரை ஆண்டுகள் என ஒவ்வொரு கோளும் ஒரு ராசியில் சஞ்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலம் வேறுபடும்.
இவற்றில் குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெறும் போது கோயில்களின் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் செய்யப்படும்.
குரு ஆண்டுதோறும் இடம் பெயர்வதால் பெரும்பாலான ஆண்டுகளில் குருப்பெயர்ச்சி ஏற்படும். ராகு-கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் ஒரு சில ஆண்டுகளில் ராகு-கேது பெயர்ச்சி இருக்காது.
அதேபோல, சனிப் பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவதால் ஒன்று அல்லது 2 ஆண்டுகளுக்கு சனிப் பெயர்ச்சி இருக்காது.
ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017-ல்) குரு, ராகு-கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.
திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 27ஆம் திகதி ராகு- கேது பெயர்ச்சி, செப்டம்பர் 2ஆம் திகதி குருப் பெயர்ச்சி, டிசம்பர் 19-ம் திகதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளன.
புதிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
மேஷம்: அனைவரையும்அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு செய்து வெற்றியாக்கி காட்டும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்களது சப்தம களத்திர ஸ்தானத்தில் கண்டச் சனியாக இருந்த சனி பகவான் இனி ஆயுள் ஸ்தானத்திற்கு அஷ்டம சனியாக மாறுகிறார்.
அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தொழில், கர்ம ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
உங்களின் தோற்றப் பொலிவு கூடும். கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும்போது அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள்.
மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.
அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.
அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும்.
இந்தப் பெயர்ச்சியின் போது கேது உங்களின் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீங்கள் பிடிவாதங்களை தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ரிஷபம்: “வாக்கே வாழ்வு’’ என்ற கூற்றுப்படி எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றுவீர்கள். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். இதுவரை உங்களது ரண, ருண களது ராசியையும், பத்தாம் பார்வையாக உங்களது சுக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதனால் சற்று மந்தமான நிலை உண்டாகும். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வர இருக்கிறது. மூன்றாமிடத்தில் இருக்கும் குரு பகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு களை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும்.
உங்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பயன்படுவதை விட மற்றவருக்கு பயன்படும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் அதை விடுவதே சிறந்தது.
மிதுனம்: மற்றவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து, மரியாதை கொடுப்பீர்கள். நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுவீர்கள். இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது தைர்ய வீரிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார். இடம் பெயரும் கர்மகாரகனான சனியால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும்.
பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலம் நிறையும். ஸ்திர ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனி பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச்சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பணவரவு உண்டாகும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளை சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். உடல்நலனைப் பொறுத்தவரை பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும்.
கடகம்: எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடுவீர்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
அர்த்தாஷ்டம ஸ்தானத்திலிருந்து விலகியிருக்கும் சனிபகவான் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டு சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
லாப ஸ்தானத்தைப் பார்க்கும் சனி பகவான், உங்களை மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைத்து செயல்பட வைப்பார். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களை தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது.
சிம்மம்: முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போடுவீர்கள். யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.
இதுவரை உங்களது தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இனி சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தொழில், கர்ம, ஜீவன ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது ராசியையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது ரண, ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக தற்போது பெயர்ந்திருக்கிறார். இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும்.
உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்துகொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும்.
மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள். ஆன்மிகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.
கன்னி: வெள்ளை மனதுடன் எளிதில் யாரையும் நம்பி விடும் பழக்கம் உடையவர்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும்.
இதுவரை உங்களது தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து சோகம், குழப்பம், மன உளைச்சல் என உங்களின் பொறுமையை சோதித்த சனீஸ்வரன் இனி மூன்றாம் ஸ்தானத்திற்கு வருகிறார். இதுவரை உங்களது தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது அயன, சயன, போக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். இனி சனி பகவான் தைரிய வீர்ய ராசியில் சஞ்சரிக்கிறார். பொதுவாக சனி பகவான் மூன்றாம் ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு என்பதே பொது விதி. அதுவே இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கிய விஷயம், இதனால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.
வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்து கொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
துலாம்:
எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடுவீர்கள். தோல்வியைக் கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். நீங்கள் நவகிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.
இதுவரை ஜென்ம சனியாகி உங்களை பாடாய்ப்படுத்திய சனீஸ்வரன் இனி உங்களது தன, வாக்கு, குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமரப் போகிறார்.இதுவரை உங்களது ராசியில் இருந்த சனி பகவான் இனி தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது லாப ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலவிதமான குழப்பங்கள் இருந்தும் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம்.
விருச்சிகம்: எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ளவர்கள் நீங்கள். எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர். துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.
இதுவரை விரயச் சனியாகி உங்களுக்கு பலவிதமான முறையிலும் விரயங்களை ஏற்படுத்திய சனீஸ்வரன் இனி உங்களது ஜென்ம ஸ்தானத்தில் அமரப் போகிறார். இதுவரை உங்களது அயன, சயன, போக ஸ்தானத்தில் இருந்த சனி பகவான், இனி உங்களது ராசிக்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத் தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தைரிய, வீர்ய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். உடல் சோர்வு அதிகரிக்கலாம். நண்பர்கள்போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம்.
துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது.
தனுசு: நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். நீங்கள் வானத்தில் கோட்டை கட்டுவீர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான முறையிலும் லாபங்களையும் விரயமாக்கிய சனீஸ்வரன் இனி விரயச்சனியாகவும் செயல்படப் போகிறார்.
இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது அயன, சயன, போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது ரண, ருண, ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள். விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் உங்களை எதிலும் நிதானமாகவும், அளவெடுத்துச் சிறப்பாகவும் செயல்பட வைப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீகச் சொத்துகள், சிரமமில்லாமல் வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம் எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும்.
மகரம்:
எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், நீங்கள். இதுவரை பத்தாம் ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி லாபச் சனியாக வந்து அமரப் போகிறார்.
இதுவரை உங்களது தொழில், கர்ம, ஜீவன ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தனது ஏழாம் பார்வையாக உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் ராசியையும் பார்க்கிறார்.தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும்.
உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். சரியான நேரத்தில் ஆகாரம் உட்கொண்டு, ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தாலே போதும்; நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
கும்பம்:
எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாதவர்கள் நீங்கள். குடும்பப் பெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பீர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுவீர்கள். இதுவரை பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி பத்தாமிடத்தில் வந்து அமரப் போகிறார்.
இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இனி உங்களது தொழில் கர்ம, ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது களத்திர ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது அயன, சயன, போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
உங்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள்.
மீனம்:
நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பீர்கள். நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள்.
இதுவரை உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தைரிய, வீர்ய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக ரண, ருண, ரோக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பணவரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம்
உண்டாகும்.
தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள்.


Share on Google Plus
loading...

About Tamil News

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment